×

மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் போல வடசென்னை காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் பணி துவக்கம்: வடிவமைப்பை தயாரித்துள்ளது சிஎம்டிஏ

சென்னை: குப்பை கூளங்களாக, மாசு படிந்த இடமாக காணப்படும் காசிமேடு கடற்கரையை, பெசன்ட் நகர் கடற்கரையை போல அழகுற மாற்றியமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை தொடங்குவதற்கான, ஆரம்ப கட்ட வடிவமைப்பை சிஎம்டிஏ தயாரித்துள்ளது. சென்னையை அழகுபடுத்தும் திட்டம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு இத்திட்டத்தின் கீழ் கடற்கரைகள் முதல் சாலைகள், தெருக்கள் என அனைத்தும் அழகுபடுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில், தென்சென்னை பகுதிகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த வடசென்னையின் சாலைகள் குண்டும் குழியுமாக, குப்பை கூளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. தென்சென்னை பகுதியில் சீரமைப்பு பணி வேகமாக நடந்து முடிந்த அளவுக்கு வடசென்னை இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தற்போது மெட்ரோ ரயில், நீருற்றுகள், சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் என மேம்படுத்தும் நடவடிக்கைகளும் வடசென்னையில் தொடங்கி உள்ளது. வடசென்னை மக்கள் நெருக்கம் மற்றும் வாகன பெருக்கத்தால் நெருக்கடி மிகுந்த பகுதி என்பதால் சாலை சீரமைப்பு தெருக்களை அழகுப்படுத்தும் பணிகளை விரைவாக முடிப்பது சவாலாக உள்ளது.

இந்த சூழ்நிலையில், மீன் வாங்குவதற்கு காசிமேடு பெயர் போனது. இங்கு நள்ளிரவு முதல் பிற்பகல் வரை மீன் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என தினமும் ஆயிரக்கணக்கில் குவிவது வழக்கமான ஒன்றாக உள்ளது. மேலும் இந்த காசிமேடு கடற்கரை பகுதிகள் மெரினா கடற்கரை போன்று உள்ளது. எனினும், காசிமேடு கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் சென்று கடலை ரசிக்க முடியாத அளவுக்கு குப்பைகள் நிறைந்த காணப்படுகிறது. இதனால், வடசென்னை மக்கள் இந்த கடற்கரை பகுதிக்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் கூட செல்ல மாட்டார்கள்.

எனவே, சென்னையில் எப்படி மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரைகள் மக்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறதோ, அதேபோன்று வடசென்னையில் காசிமேடு கடற்கரை பகுதி இருந்தால் எப்படி இருக்கும் என்பது வடசென்னை மக்களின் கனவாகத் தான் இருந்து வருகிறது. அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையைாகவும் இது இருந்து வருகிறது. ஆனால், காசிமேடு கடற்கரையில் காணப்படும் குப்பைகள், கடலில் கழிவுநீர், காலி மதுபாட்டில்களை பார்க்கும்போது, மக்கள் ரசிக்கும் கடற்கரை பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

ஆனால் அப்படிப்பட்ட காசிமேடு கடற்கரைக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது என்ற தகவல் வடசென்னை மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது. அவர்களின் நீண்ட கால கனவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த கடற்கரையை 2024ம் ஆண்டின் இறுதிக்குள் பெசன்ட் நகர் கடற்கரையை போன்று எழில் மிகுந்த சுற்றுலா தளமாக, பயணிகளை கவரக்கூடிய கடற்கரையாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தால் காசிமேடு கடற்கரையை நோக்கி சுற்றுலா பயணிகள் நிறையபேர் படையெடுப்பார்கள்.

எனவே, அதை அழகுபடுத்தும் பணிகளில் சிஎம்டிஏ களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்குண்டான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்திருப்பது வடசென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் காசிமேடு பீச், பெசன்ட் நகரின் எலியட்ஸ் கடற்கரையைப் போல அழகுற வடிமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பகுதிகள், நீரூற்றுகள் கொண்ட பிளாசா, உணவு அரங்கம், விளையாட்டுப் பகுதி, கழிப்பறைகள் மற்றும் காசிமேடு மீன் என்று அழைக்கப்படும் சிற்பம் போன்றவற்றுடன் அழகாக்கும் முயற்சியில் சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

அதன்படி, காசிமேடு மீன் மார்க்கெட் மற்றும் எண்ணூர் விரைவுச்சாலை மற்றும் வடக்கு டெர்மினல் சாலை சந்திப்பு வரையிலான 1.5 கி.மீ தூரத்துக்கு சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு, அழகாக மாற்றுவதற்கான ஆரம்ப வடிவமைப்பை சிஎம்டிஏ தயாரித்துள்ளது. இதுதொடர்பாக சட்டப் பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) மூத்த திட்டமிடல் அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்படி, காசிமேடு கடற்கரையில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில் சிஎம்டிஏ நடத்திய மூன்றாவது மாஸ்டர் பிளானுக்கான தொலைநோக்குப் பயிற்சிக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் சிஎம்டிஏ அமைச்சர் சேகர் பாபு மற்றும் சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்ஷுல் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில், காசிமேடு கடற்கரை பகுதிகளை பெசன்ட்நகர் கடற்கரையை போன்று எழில்மிகு கடற்கரையாக மாற்றும் பணிகளை சிஎம்டிஏ அதிகாரிகள் வேகப்படுத்தி உள்ளதால், விரைவில் வடசென்னை மக்களின் நீண்டகால கனவு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், காசிமேடு கடற்கரை அழகுப்படுத்தப்பட உள்ளதால் பொதுமக்கள் வருகை அதிகரிக்கும். அதன் மூலம் அங்கு அமைக்கப்படும் உணவுக் கடைகள் மூலம் மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இருக்காது. இது ஒரு சிறந்த நடவடிக்கை என்றும், மீனவர்களின் வாழ்க்கைச் இதனால் மேம்படும் என மீனவர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

* சிறப்பம்சங்கள் என்ன?
வடசென்னை கடற்கரையில் அமைக்கப்பட உள்ள சிறப்பம்சங்கள்
இடம் ரூபாய்
உணவு கூடம் ரூ.1 கோடி
நீரூற்றுடன் பிளாசா ரூ.2.5 கோடி
மீன் சிற்பம் ரூ.50 லட்சம்
கழிவறை ரூ.50 லட்சம்
நடைபாதை ரூ.3.5 கோடி

* மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்
இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: காசிமேடு கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரைக்கு இணையாக நவீனப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இந்த கடற்கரையில், வட சென்னையின் பூர்வ குடிமக்களான மீனவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் கலாசாரம் மற்றும் உணவை மேம்படுத்தும் வகையிலான சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளது. இங்கு உருவாக்கப்படும் பிளாசாவில் ஸ்டால்கள் அமைக்க மீனவர்கள் ஊக்குவிப்படுவார்கள். இதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். இந்த பிளாசாவின் நடுவில் ஒரு மீன் சிற்பம் இருக்கும் வகையில் அமைக்கப்படும். மேலும், அங்கு அமைப்படும் பிளாசாவில் கேலரி போன்ற இருக்கைகள் இருக்கும். அங்கு தினமும் மாலையில் இசை நிகழ்ச்சிகளும் தெரு நாடகங்களும் நடக்கும். மீனவ சமூகம், அவர்களின் வாழ்க்கை, கலாசாரம் பற்றிய விவரங்களை விளக்கும் பலகைகள் நடைபாதையில் வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் போல வடசென்னை காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் பணி துவக்கம்: வடிவமைப்பை தயாரித்துள்ளது சிஎம்டிஏ appeared first on Dinakaran.

Tags : Marina ,Besant Nagar ,North Chennai ,Kasimedu beach ,Elliott's Beach ,CMDA ,CHENNAI ,Kasimedu ,Besant Nagar beach ,Elliot's beach ,Dinakaran ,
× RELATED மெரினாவில் ₹7 கோடி செலவில் பாய்மர படகு...